வெள்ளகோவில் : கார் மோதி கட்டிட தொழிலாளி பலி

வெள்ளகோவில் அருகே கார் மோதியதில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-06-03 05:17 GMT

முருகபாண்டியன்

வெள்ளகோவில் அருகே உள்ள குறுக்கத்தியைச் சேர்ந்தவர் முருகபாண்டியன் (வயது 48), இவருடைய மனைவி முத்துலட்சுமி (45 ) இவர்களுக்கு கோகுல கிருஷ்ணன் (18) நாகேந்திரன் (13) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கோகுல கிருஷ்ணன் கோவையில் உள்ள தனியார் கல்லூரியிலும் நாகேந்திரன் திருப்பூரில் உள்ள பள்ளியிலும் படித்து வருகின்றனர். முருகபாண்டியன் தனது மனைவி மகன்களுடன் திருப்பூரில் குடியிருந்து கொண்டு கட்டிட சென்ட்ரிங் வேலைக்கு சென்று வந்தார். 

Advertisement

இந்த நிலையில் குறுக்கத்தியில் உள்ள தனது தாயார் பாலாமணியை பார்ப்பதற்காக வந்திருந்த முருகபாண்டியன் கடந்த 30 ஆம் தேதி அதிகாலை மோட்டார் சைக்கிளில் திருப்பூருக்கு புறப்பட்டார். அவர் கரூர் காங்கேயம் தேசிய நெடுஞ்சாலையில் குறுக்கத்தியை  அடுத்துள்ள தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மீண்டும் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது மனைவி முத்துலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வெள்ளகோவில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News