முப்படை தளபதி இறந்தபோது வராத மோடி பிரச்சாரத்திற்கு வருவது ஏன்? -ஆ.ராசா

முப்படை தளபதி பிபின் ராவத் இறந்தபோது வராத மோடி தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டும் வருவது ஏன்? ஆ.ராசா கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2024-04-04 05:42 GMT

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 4ம் முறையாக நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் ஆ.ராசா அருவங்காடு, குன்னூர், வெலிங்டன் உள்பட பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார்.

பிரசாரத்தின் போது ஆ.ராசா பேசியதாவது:- பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வருகை தந்து தமிழ்நாட்டை நேசிப்பதாகவும் தமிழை நேசிப்பதாகவும் கூறுகிறார். மேட்டுப்பாளையத்திற்கு வருகை தந்த பா.ஜ.க., தலைவர் நட்டா பேசும்போது தி.மு.க.,வும் ஸ்டாலினும் தமிழ்நாட்டை பிரிக்க பார்க்கிறார்கள், தமிழ்நாடு தனியாக இருப்பதாகவும் தேசிய ஓட்டத்திற்கு வருவதில்லை என பேசியுள்ளார். அனால் பாகிஸ்தான் இந்தியா மீது படை எடுத்த போதும் கார்கில் போரிற்காக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நிதி வழங்கினார். எங்களுக்கு தேச ஒற்றுமை இருக்கிறது. நீலகிரி மாவட்டத்திற்கு வர உள்ள பிரதமர் மோடி பாரத் மாதா கி ஜே என்றும், தமிழை நேசிப்பதாகவும், தேச பக்தி இல்லை எனவும் கூறிவிட்டு செல்வார்.

தேர்தல் நேரத்தில் மட்டும் நீலகிரி மாவட்டத்திற்கு வர உள்ள பிரதமர் நரேந்திர மோடி, முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த போது ஏன் நீலகிரி மாவட்டத்திற்கு வரவில்லை. முப்படை தளபதி பிபின் ராவத் விபத்தில் உயிரிழந்த போது ஓடோடி வந்து தேசிய கொடியை போற்றி வீரவணக்கம் செலுத்தியவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். ராணுவத்திற்கு தேவையான வெடி மருந்துகளை உற்பத்தி செய்யும் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலைக்கு ஏன் இதுநாள் வரை பிரதமர் மோடி வரவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது அவருடன் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் முபாரக், குன்னூர் நகராட்சி துணைத் தலைவர் வாசிம் ராஜா உள்பட பலர் இருந்தனர். இதேபோல் மஞ்சூர் பகுதியில் தனியார் தேயிலை தோட்டத்தில் இருந்த தொழிலாளர்களிடம் ஆ.ராசா நேரில் சென்று வாக்கு சேகரித்தார். முன்னதாக பிரசாரத்திற்கு அவர் சென்ற இடமெல்லாம் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News