ஏற்காடு பேருந்து விபத்து - 5பேர் பலி, 62பேர் காயம்
சேலம் ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 62 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பேருந்து 13வது கொண்டை ஊசி வளைவில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த 80அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து அந்த வழியாக சென்றவர்கள் ஏற்காடு போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம்பட்டவர்களை மீட்டு ஆம்புலன்சில் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போதிய அளவு ஆம்புலன்ஸ் இல்லாததால், அந்த வழியாக சென்ற வேன், டெம்போ, மினி லாரி உள்ளிட்ட வாகனங்களில் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அவர்களை அனுப்பி வைத்தனர். காயம் அடைந்தவர்களை அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் சக்கர நாற்காலிகள் மூலம், ஸ்டெக்சர் மூலமும் விரைந்து அழைத்து சென்றனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததில், சிகிச்சை பலனின்றி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
இதனிடையே போலீசார் நடத்திய விசாரணையில், சேலம் சூரமங்கலம் ஏ.சி.எம்.நகர் ஆண்டிப்பட்டியை சேர்ந்த சேகர் மகன் கார்த்திக் (வயது 37), நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த முனீஸ்வரன் (11), சேலம் கன்னங்குறிச்சி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஹரிராம் (57), சேலம் சின்னத்திருப்பதியை சேர்ந்தவரும், ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி புரிந்து வந்தவருமான சந்தோஷ் பிரபாகரன் (55), சேலம் கிச்சிப்பாளையம் கஸ்தூரி பாய் தெருவை தேர்ந்த மாது (60) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டு உள்ளது.