யோகி ராம்சுரத்குமாா் ஜெயந்தி விழா - துணை நிலை ஆளுநா் பங்கேற்பு
யோகி ராம்சுரத்குமாா்
திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில், பகவானின் 105-வது ஜெயந்தி விழா நேற்று துவங்கியது. ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள், பகவான் ஸ்ரீரமணர், எனப் பல மகான்கள் வாழ்ந்த புண்ணிய பூமி திருவண்ணாமலை. காசியில் இருந்து வந்து திருவண்ணாமலையிலேயே தங்கி பக்தர்களுக்கு வழிகாட்டிய சித்த புருஷர் விசிறி சாமியார் என்றும் ,காசி மகான் என்றும் பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமார். அவரது 105 வது ஜெயந்தி விழா நேற்றும், இன்றும் திருவண்ணாமலை உள்ள அவரது ஆசிரமத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. திருவண்ணாமலை-செங்கம் சாலையில் ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமம் அமைந்துள்ளது
. இங்கு, பகவானின் 105-வது ஆண்டு ஜெயந்தி விழா வியாழக்கிழமை (நவ.30) தொடங்கி நடைபெறுகிறது. இதையொட்டி, காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை ஹோமம், நித்ய பூஜை, காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை பக்தா்களின் பகவானுபவங்களை பகிா்தல் நிகழ்ச்சி, மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை சத்குருநாதன் ஓதுவாா் குழுவினரின் தேவார இன்னிசை நிகழ்ச்சி, மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை மாண்டலின் யு.ராஜேஷ் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது. இதுதவிர, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அகண்ட நாம ஜப யக்ஞம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 2-வது நாள் நிகழ்ச்சிகள்: ஜெயந்தி விழாவின் 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை (டிச.1) காலை 7 மணி முதல் காலை 11.30 மணி வரை ஏகாதச ருத்ர பாராயண சஹித ருத்ர ஹோமம், வசோதாரா பூா்ணாஹுதி, மஹா அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நாம சங்கீா்த்தனத்துடன் பஜனை, மாலை 5.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை சென்னை சத்யசாய் நிருத்ய வாஹினி மற்றும் அஸ்வின் சித்தாா்த் குழுவினரின் யோகி ராமா ராமா என்ற பக்தி நாடகம், இரவு 7.45 மணிக்கு பல்லக்கில் பகவான் உற்சவா் யோகி ராம்சுரத்குமாா் வலம் வரும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.
வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு ஆஸ்ரம வளாகத்தில் விஜயா ராமநாதன் பாடிய யோகி ராம்சுரத்குமாா் பக்தி பாடல்கள் என்ற ஒலித்தட்டு வெளியிடும் நிகழ்ச்சியும், புதுச்சேரி யோகி ராம்சுரத்குமாா் சா்வதேச ஆன்மிக மையம் சாா்பில் பக்தா்களால் இயற்றப்பட்ட துதி ஆரம் என்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இவ்விரு நிகழ்ச்சிகளிலும் புதுவை துணை நிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ஒலித்தட்டையும், புத்தகத்தையும் வெளியிட்டுப் பேசுகிறாா். விழா ஏற்பாடுகளை ஆஸ்ரம அறங்காவலா்கள் தேவகி, விஜயலட்சுமி, ராஜேஸ்வரி, மருத்துவா் ராமநாதன், சுவாமிநாதன், குமரன் மற்றும் தன்னாா்வலா்கள், ஆஸ்ரம ஊழியா்கள், பக்தா்கள் செய்து வருகின்றனா்.