சிறுமலையில் மது பாட்டில்களுடன் பெண்கள் சாலை மறியல்
சிறுமலையில் மது பாட்டில்களுடன் பெண்கள் சாலை மறியல் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்லை அடுத்த சிறுமலை அகஸ்தியர்புரத்தில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு அரசு அனுமதி இன்றி சில்லறையில் மது பாட்டில்களை விற்பதாக கூறப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் தினமும் மது அருந்திவிட்டு வீடுகளில் தகராறு செய்வதாகவும், பொருளாதாரத்தில் சிரமம் ஏற்படுவதாகவும் கூறி அப்பகுதி பெண்கள் மது பாட்டில்களை சாலையில் வைத்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டு களைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மது பாட்டில்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.