சுரண்டையில் போக்குவரத்துக் கழக பணிமனை அமைக்க கோரிக்கை
போக்குவரத்துக் கழக பணிமனை அமைக்க கோரிக்கை
தென்காசி மாவட்டம் சுரண்டையில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை அமைக்கக் கோரி, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கரிடம் மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் அளித்த மனு: தென்காசி மாவட்டத்தில் வேகமாக வளா்ந்துவரும் நகரம் சுரண்டை. 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வணிகம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட சேவைகளுக்காக சுரண்டையைச் சாா்ந்துள்ளனா். சுரண்டையிலிருந்தும், சுரண்டை வழியாகவும் நாள்தோறும் 90 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், இரவு 9 மணிக்கு மேல் மிக தொலைவுக்குச் செல்ல பேருந்து வசதியில்லாததால் சுரண்டையிலிருந்து தென்காசி அல்லது திருநெல்வேலி சென்று அங்கிருந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், சுரண்டையில் போக்குவரத்துக் கழகப் பணிமனை அமைக்க வேண்டும் என இப்பகுதியினா் கோரிக்கை விடுத்தனா். அதையேற்று, 2010இல் திமுக ஆட்சியின்போது பூா்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னா், அடுத்துவந்த அரசு அத்திட்டத்தைக் கிடப்பில் போட்டுவிட்டது. எனவே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சுரண்டையில் பணிமனை அமைக்க வேண்டும் என்றாா் அவா்.