தேசிய அளவிலான கராத்தே போட்டி: பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு..
தேசிய அளவிலான கராத்தே போட்டி: பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு..
தேசிய அளவில் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற தமிழக மாணவர்களுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது. கர்நாடக மாநிலம் புத்தூரில் மாஸ்டர் அனுமந்தராவ் நினைவு சுழற்கோப்பைக்கான தேசிய அளவிலான கராத்தே போட்டி புதோகான் கராத்தே டோ இன்டர்நேஷனல் சார்பில் அண்மையில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர். தமிழ்நாடு அணியின் சார்பில் சோட்டகான் கராத்தே அகாடமி மாணவ மாணவியர்கள் 45 பேர் பங்கேற்றனர். இதில் சோட்டகான் கராத்தே அகாடமி மாணவர்கள் கட்டா பிரிவில் 4 தங்கம், 9 வெள்ளி, 16 வெண்கலம், குமிட்டி பிரிவில் 5 தங்கம், 2 வெள்ளி, 11 வெண்கலம், வெப்பன் கட்டா பிரிவில் 1 தங்கம், 1 வெள்ளி, 5 வெண்கலம் பதக்கம் என மொத்தம் 54 பதக்கங்கள் பெற்றனர். வெற்றி பெற்று பதக்கம் வென்ற மாணவ மாணவியர்கள் பயிற்சியாளர் வெ.சரவணன் உள்ளிட்டோரையும் மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், ராசிபுரம் நகர திமுக செயலர் என்.ஆர்.சங்கர், முன்னாள் எம்எல்ஏ., கே.பி.ராமசாமி, ஸ்ரீவித்யா மந்திர் பள்ளிகளின் தலைவர் என்.மாணிக்கம் ஆகியோர் பாராட்டி கெளரவித்தனர்.