கே.எஸ்.ஆர் கல்லூரியில் கலைத்திருவிழா, தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, "சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு" என்ற மையக்கருத்தின் அடிப்படையில் கலைத்திருவிழா 2024 -25 போட்டிகளை தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனத்தில் மாவட்ட ஆட்சியர் இன்று நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் , நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலையில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் 2024 – 25 ஐ தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் ன தெரிவித்தாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் ஆகியோரின் சீரிய முயற்சியினால் பள்ளிக்கல்வித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. மாணவர்களிடம் மறைந்திருக்கும் திறமையை வெளிக்கொணரவும், நடைமுறையில் உள்ள கலை மரபுகள் பற்றி அவர்களுக்குக் கற்பிக்கவும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கலை வடிவங்களில் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தவும் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு இக்கலைத்திருவிழா போட்டிகள் "சங்கமிப்போம் சமத்துவம் படைப்போம்" என்ற மையக்கருத்தின் அடிப்படையில் நடைபெற்றது. அதுபோன்று இவ்வாண்டிற்கான கலைத்திருவிழா போட்டிகள், மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வளப்படுத்துதல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் "சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு" என்ற மையக்கருத்தின் அடிப்படையில் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகின்றன. மாணவ, மாணவியர்கள் புத்தக கல்வியோடு தங்களது தனி திறமைகளையும் மேம்படுத்தி கொள்ள வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவி துளசிமதி முருகேசன் பாரா ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்று நம் மாவட்டதிற்கு பெருமை சேர்ந்துள்ளார்கள். அவர்களுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த குகேஷ் அவர்கள் சதுரங்க போட்டிகளில் உலக சேம்பியன் பட்டம் வென்று பெருமை சேர்த்துள்ளார்கள். இவர்களை போன்று நீங்களும் தங்களுக்கு உள்ள தனி திறமைகளை மேம்படுத்தி கொண்டு தங்கள் பயிலும் பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள கலை திருவிழா போட்டிக்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். நாமக்கல் மாவட்டத்தில் 03.01.2025 மற்றும் 04.01.2025 ஆகிய இரண்டு நாட்கள் குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனத்தில் வகை 1: கவின்கலை / நுண்கலை – அனைத்து போட்டிகள், வகை 7: நாடகம் – அனைத்து போட்டிகள் மற்றும் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்.கல்வி நிறுவனத்தில் வகை 2: இசை (வாய்ப்பாட்டு) - அனைத்து போட்டிகள், வகை 3: கருவி இசை – தோற்கருவி - அனைத்து போட்டிகள், வகை 4: கருவி இசை – துளை – காற்றுக் கருவிகள் – அனைத்து போட்டிகள், வகை 5: கருவி இசை – தந்திக் கருவிகள் – அனைத்து போட்டிகள், வகை 6: நடனம் – அனைத்து போட்டிகள் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளது. 2024-25 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களின் கலைத் திறனை வெளிப்படுத்தும் வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத்திருவிழா நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து இக்கல்வியாண்டு முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களும் பங்கேற்கும் வகையில் கலைத்திருவிழா நடத்தப்படும்" என்ற அறிவிப்பினை அறிவித்துள்ளார். மேற்கண்ட அறிவிப்பின்படி, 2022 -23 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களின் கலைத் திறன்களை வெளிகொணரும் விதமாக, பள்ளிக் கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, பள்ளி, வட்டாரம். மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மாநில அளவில் கலையரசன், கலையரசி பட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 2024-25 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தனித்தனியே கலைத்திருவிழா போட்டிகள் நடத்திட திட்டமிடப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. கலைத்திருவிழா 2024-25 போட்டிகள் 5 பிரிவுகளில் நடத்தப்பட்டன. பிரிவு 1-ல் 5 போட்டிக்ள 1 மற்றும் 2 ஆம் வகுப்பு, பிரிவு 2-ல் 8 போட்டிகள் 3 முதல் 5 ஆம் வகுப்பு வரை, பிரிவு 3-ல் 11 போட்டிகள் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை, பிரிவு 4-ல் 30 போட்டிக்ள 9 மற்றும் 10 ஆம் வகுப்பு வரை மற்றும் பிரிவு 5-ல் 30 போட்டிகள் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரை நடத்தப்பட்டன. மேலும் சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவு, மாணவியர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகள் நடத்திட திட்டமிடப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. 2024-25 கலைத்திருவிழா போட்டிகளில் பள்ளி அளவில் நடைபெற்ற போட்டிகளில் 34,83,006 அரசு பள்ளி மாணவர்கள், 11,89,155 அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் என மொத்தம் 46,72,161 நபர்கள், குறுவளம் அளவில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 3,23,339 அரசுப்பள்ளி மாணவர்கள், 64,156 அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்கள் என மொத்தம் 3,84,495 நபர்கள், வட்டார அளவில் 3,76,320 அரசு பள்ளி மாணவர்கள், 89,698 அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்கள் என மொத்தம் 4,66,018 நபர்கள், மாவட்ட அளவில் 60,575 மாணவர்கள், 28,775 அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்கள் என மொத்தம் 89,350 நபர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். மேலும், மாநில அளவில் 7,453 அரசு பள்ளி மாணவர்கள், 5,954 அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்கள் என மொத்தம் 13,407 மாணவ, மாணவியர்கள் போட்டிகளில் பங்கேற்க உள்ளார்கள். நாமக்கல் மாவட்டத்தில், 1 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி மற்றும் வட்டார அளவில் போட்டிகள் நடைபெற்று முடிந்து வட்டார அளவில் முதல் மூன்று இடத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட அளவில் நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய இரு நாட்கள் போட்டிகள் நடைபெற்றது. இதில் 2,214 மாணவர்கள் பங்கேற்றனர். மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற 353 மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். மாநில அளவில் 1-2 மற்றும் 3-5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோயமுத்தூர் மாவட்டத்திலும், 6-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்பூர் மாவட்டத்திலும், 9-10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஈரோடு மாவட்டத்திலும், 11 – 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாமக்கல் மாவட்டத்திலும் நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 03.012025 இன்று அரசு பள்ளி மாணவர்களுக்கு குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனம் மற்றும் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்.கல்வி நிறுவனத்தில் 7 வகையில் 30 போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கு தமிழ்நாட்டிலிருந்து 620 பள்ளிகளில் 2,519 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் நாமக்கல் மாவட்டத்திலிருந்து 76 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்விற்கு 288 ஆசிரியர்கள் பணியாற்ற உள்ளனர். 04.012025 அன்று அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனம் மற்றும் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்.கல்வி நிறுவனத்தில் 7 வகையில் 30 போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கு தமிழ்நாட்டிலிருந்து 250 பள்ளிகளில் 1,752 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் நாமக்கல் மாவட்டத்திலிருந்து 40 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இப்போட்டிகளில் 288 ஆசிரியர்கள் பணியாற்ற உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் ன தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் ம.சுஜாதா, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இணை இயக்குநர் வை.குமார், முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) எம்.ஜோதி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.