காட்டுப்பன்றிகள் அட்டகாசம்
பர்கூர் மலைப்பகுதியில் காட்டுப்பன்றிகளால் விளைநிலங்கள் தொடர்ந்து சேதம் நிரந்தர தீர்வு காண மலை கிராம விவசாயிகள் கோரிக்கை
ஈரோடு மாவட்டம் பர்கூர், தாமரைக்கரை, தட்டக்கரை, தாளக்கரை, மணியாச்சி, தேவர் மலை, ஈரெட்டி, மடம், சோளகனை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, ராகி, கம்பு, சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டன. குறிப்பாக, 500 -க்கும் மேற்பட்ட விவசாயிகள், சுமார் 1,500-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில், ராகி, கம்பு, சோளம் ஆகிய பயிர்களை பயிரிட்டிருக்கின்றனர். இந்நிலையில், ஈரெட்டி, தாமரைக்கரை, தட்டக்கரை, பர்கூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில், உணவுக்காக நுழைந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள வயல்வெளிகளில், ராகி, கம்பு, சோளம் உள்ளிட்ட பயிர்களை இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக சென்று தின்று காட்டுப்பன்றிகள் அழித்து விடுகின்றன. இதனால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். ஒரு ஏக்கரில் பயிர் செய்வதற்கு குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்து விவசாயிகள் பயிரிடுகின்றனர். அதனை காட்டுப்பன்றிகள் தின்று விட்டு அட்டகாசத் செய்வதால், அவர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், அதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ராகி, கம்பு, சோளம் ஆகிய பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க தலைவர் குணசேகரன் கூறியதாவது :- பர்கூர், தாமரக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழையால், ராகி, கம்பு, சோளம் ஆகிய பயிர்கள் நன்றாக வளர்ந்து வந்தது. தற்போது ஒரு வார காலத்தில் அறுவடை செய்யும் நேரத்தில் காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தி உள்ளது. ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை செலவாகிறது. இவை தவிர, மனித உழைப்பும் உள்ளது. கடந்த 5 மாதங்களாக மழை, குளிர், வெயில் என பாக்காமல் இரவு, பகலாக விவசாயிகள் காவல் காத்த வந்த நிலையில், பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி இருப்பது அவ்விவசாயிகளை பெரிதும் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. ஏற்கனவே, பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவதை தடுக்க வேண்டும் அல்லது பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் என பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும், வேளாண்த்துறையிடமும் கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனாலும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவதை தடுப்பதற்கு, மாவட்ட நிர்வாகமோ, வேளாண்த்துறையோ இதுவரை எந்த தீர்வும் சொல்லவில்லை. காட்டுப்பன்றிகளின் அட்டகாசத்தால் பாதிக்கப்பட்ட ஏராளமான விவசாயிகள், தங்களின் விளைநிலத்தை அப்படியே விட்டு விட்டு, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு தேயிலை தோட்டத்தில் கூலிகளாக சென்று விட்டனர். இதனால், அவர்கள் குழந்தைகளின் பள்ளிப் படிப்பும் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, காட்டுப்பன்றிகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற மாவட்ட நிர்வாகமும், வேளாண்த்துறையும் நிரந்தர தீர்வு காண வேண்டும். இல்லையென்றால், கேரளாவை போன்று விளைநிலங்களுக்குள் வரும் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.