எட்டுக்குடி முருகன் கோவிலில் சஷ்டி
ஏராளமான பக்தர்கள் காவடி சுமந்து வந்து சாமி தரிசனம்
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில், முருகனின் ஆதிபடை வீடான ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், சஷ்டியை முன்னிட்டு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, ஏராளமான பக்தர்கள் நேற்று காவடி எடுத்து வந்து முருகனுக்கு நேர்த்திக் கடன் நிறைவேற்றினர். கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா என பக்தி பரவசத்தோடு கோயில் உள் பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரம் உள்ளிட்ட இடங்களில், பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி உள்ளிட்டவற்றை பக்தர்கள் சுமந்து வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்கள் சுமந்து வந்த பால் கொண்டு முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா காட்சி நடைபெற்றது. விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.