சிறப்பாக பணியாற்றிய ஊராட்சி மன்ற தலைவருக்கு
தூய்மை பணியாளர்கள் வெள்ளி விளக்கு பரிசு
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கருப்பம்பலம் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வருபவர் சுப்புராமன். இவரது பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது அடுத்து அவருக்கு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. இவர் தன் பதவி காலத்தில், தூய்மை பணியாளர்களுக்கு, பண்டிகை காலங்களில் புத்தாடை மற்றும் இனிப்பும், ஆண்டுதோறும் வழங்கி வந்தார். மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம், திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைந்துள்ள பகுதியில், தூய்மை பணியாளர்களை கொண்டு கடலை மற்றும் தானியங்களை சாகுபடி செய்து, அதில் வரும் லாபத்தை தூய்மை பணியாளர்கள் பெறும்படி செய்தார். மேலும், தற்போது பணியாற்றும் தற்காலிக பணியாளர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் விபத்து காப்பீட்டுத் தொகையை, தன்னுடைய சொந்த செலவில் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில், நேற்று நடந்த பாராட்டு விழாவில், ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமனுக்கு தூய்மை பணியாளர்கள், வெள்ளி விளக்கு பரிசாக வழங்கினர். மேலும், சால்வை மற்றும் மாலை அணிவித்து, பாராட்டினர். மேலும், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி பணியாளர்கள், கிராம மக்கள் ஆகியோர் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமனுக்கு சால்வை அணிவித்து பாராட்டினர். தனக்கு பாராட்டு தெரிவித்த தூய்மை பணியாளர்களுக்கு, ஊராட்சி மன்ற தலைவர் நினைவு பரிசு வழங்கி அவர்களிடம் ஆசி பெற்றார். நிகழ்ச்சியில், நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன், ஆத்மா குழு உறுப்பினர்கள் உதயம் முருகையன், சதாசிவம், மகாகுமார், வேதாரண்யம் நகராட்சி தலைவர் புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.