தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம் சனிக்கிழமை பொறுப்பேற்றார். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த இவர் பி.எஸ்ஸி., எம்.ஏ., பி.எல். படித்துள்ளார். இவர் 2009 ஆம் ஆண்டில் காவல் துணைக் கண்காணிப்பாளராக (டி.எஸ்.பி.) தேர்வு செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டத்தில் பயிற்சி துணைக் கண்காணிப்பாளராக இருந்த இவர் முதல் முதலாக திருப்பூரில் துணைக் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து, கடலூர் மாவட்டம் சிதம்பரம், திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து, சேரன்மகாதேவி, மதுரை மாவட்டம் சமயநல்லூர் ஆகிய இடங்களில் காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றினார். பின்னர், காவல் கூடுதல் கண்காணிப்பாளராகப் (கூடுதல் எஸ்.பி.) பதவி உயர்வு பெற்று முதல் முறையாக தூத்துக்குடியில் பொறுப்பேற்றார். பின்னர், சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் பிரிவில் நான்கரை ஆண்டுகள் கூடுதல் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார். அப்போது, தஞ்சாவூர் பெரிய கோயிலிருந்து ஏறத்தாழ 65 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்டு, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தனியார் அருங்காட்சியகத்தில் இருந்த ராஜராஜசோழன் மற்றும் உலோகமாதேவி சிலைகளை 2018 ஆம் ஆண்டு மீட்டுக் கொண்டு வந்த சிலை திருட்டு தடுப்பு காவல் குழுவினரில் இவரும் ஒருவர். இதேபோல, புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகேயுள்ள கைலாசநாதர் கோயில் நடராஜர் சிலை, தீபாம்பாள்புரம் வன்மீகநாதர் கோயில் சிவன் - பார்வதி சிலை உள்பட பல்வேறு கோயில்களைச் சார்ந்த 10 சிலைகளை வெளிநாடுகளிலிருந்து 2022 ஆம் ஆண்டு மீட்டுக் கொண்டு வந்த குழுவிலும் இவர் இடம்பெற்றிருந்தார். இதைத்தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டில் காவல் கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்று, சென்னை பெருநகரக் காவல் எல்லையில் புதிதாக உருவாக்கப்பட்ட குளத்தூர் துணை ஆணையரகத்தில் முதல் துணை ஆணையராகப் பொறுப்பேற்றார். இதையடுத்து, 2023 ஆம் ஆண்டில் கடலூர் காவல் கண்காணிப்பாளராக இருந்த இவர் பணி மாறுதலில் தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக டிசம்பர் 29 ஆம் தேதி நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக சனிக்கிழமை காலை பொறுப்பேற்றார். தஞ்சாவூர் மாவட்டக் கண்காணிப்பாளராக இருந்த ஆஷிஷ் ராவத் பணிமாறுதலாகி சிவகங்கை மாவட்டத்துக்கு சென்றார்.