குமரி மாவட்டம் குளச்சல் அருகே கிழக்கு பண்டார விளை பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அனிதா (37). இந்த தம்பதிக்கு ஏழு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அனிதா கணவருடன் சிங்கப்பூரில் இருந்தார். மூன்று மாதங்களுக்கு முன்பு அவர் ஊருக்கு திரும்பினார். இந்த நிலையில் கணவர் ஊர் கோவில் விழா முன்னிட்டு நேற்று முன்தினம் அனிதா குழந்தையை தாயார் வீட்டில் விட்டு விட்டு தனியாக கணவர் வீட்டுக்கு சென்றார். கோயில் விழாவில் கலந்து கொண்டவர் இரவு கணவர் வீட்டில் தங்கினார். நேற்று காலை மாமியார் ஒரு இறப்பு வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த அனிதா அறையை உள்பக்கமாக பூட்டி விட்டு படுத்துள்ளார். மரண வீடு சென்று திரும்பிய மாமியார் அனிதாவின் அறை திறக்கப்படாதது கண்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் திறந்து பார்த்தார். அப்போது அனிதா வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தார். உடனடியாக குளச்சல் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிங்கப்பூரில் உள்ள கணவர் ஜெகதீஷ்க்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.