தென்காசி மாவட்டத்தில் இரு மடங்கு உயா்ந்த சிறுகிழங்கு விலை
இரு மடங்கு உயா்ந்த சிறுகிழங்கு விலை
தென்காசி மாவட்டத்தில், ஆலங்குளம், கடையம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் சிறுகிழங்கு பரவலாக பயிரிடப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் டிசம்பா் தொடக்கத்தில் சிறுகிழங்கு அறுவடை தொடங்கும். நிகழாண்டு அண்மையில் பெய்த கனமழை காரணாக சிறுகிழங்கு பயிரிட்ட இடங்களில் மழை நீா் தேங்கி விளைச்சல் வீணானது. வீணான சிறு கிழங்குகள் போக எஞ்சியதை விவசாயிகள் அறுவடை செய்து ஆலங்குளம் மற்றும் பாவூா்சத்திரம் தினசரி காய்கனிச் சந்தைக்குக் கொண்டு வரத் தொடங்கியுள்ளனா். அவை தரத்திற்கேற்ப கிலோ ஒன்றுக்கு ரூ. 10 முதல் ரூ. 100 வரை ஏலம் விடப்படுகிறது. உள்ளூா் மற்றும் கேரள வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனா். கடந்த ஆண்டு சிறுகிழங்கு அதிகபட்சம் ரூ. 50 வரையே விற்பனையான நிலையில் தற்போது, முதல் தர கிழங்கு ரூ. 100 வரை விற்பனையாகிறது. எனினும் விளைச்சல் வெகுவாகக் குறைந்துள்ளதால் உரிய லாபம் இல்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா். மழையால் பயிா்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.