நாகை நகராட்சிக்குட்பட்ட பிள்ளையார் கோவில் தெரு குடியிருப்புக்கு

அடிப்படை வசதிகள் செய்து தர பொதுமக்கள் கோரிக்கை

Update: 2025-01-06 08:44 GMT
நாகை நகராட்சிக்குட்பட்ட காடம்பாடி 15-வது வார்டில் பிள்ளையார் கோவில் தெரு உள்ளது. இந்த குடியிருப்புக்கு அருகில், மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம், காவலர்கள் குடியிருப்பு, ஆயுதப்படை மைதானம் உள்ளிட்டவை உள்ளன. இவற்றை சுற்றிலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், கடந்த 2016 -ம் ஆண்டு முதல் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இக்குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் இதுவரை செய்து தரப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அடிப்படைத் தேவைகளில் மிக முக்கிய தேவையான, குடிநீர் வசதி கூட செய்து தரப்படவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியர், நாகை நகராட்சி அலுவலகம் ஆகியவற்றுக்கு பலமுறை மனு அளித்தும், இதுவரை எவ்வித வசதியும் செய்து தரப்படவில்லை. இவர்களது குடியிருப்புகளுக்கு செல்லும் சாலைகள் முழுமை பெறாமல் இருப்பதுடன், ஒத்தையடி பாதையாகவே இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி குடியிருப்புக்கு அருகில் உள்ள காலி மனைகளில் செடிகள் காடு போல் மண்டி உள்ளது. இதனால் இரவு நேரங்களில், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் வீட்டிற்குள் வந்து விடுவதால், மிகுந்த அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர். மேலும், தெருவிளக்குகள் அமைப்பதற்கான போஸ்ட்கள் அமைக்கப்பட்டும், மின்விளக்கு பொருத்தப்படாமல் அவை வெறும் காட்சி பொருளாகவே இருந்து வருகிறது. மின்விளக்குகள் பொருத்தப்படாததால், இரவு நேரங்களில் ‌ பொதுமக்கள் அச்சமின்றி நடந்து செல்ல முடியாத நிலைமை இருந்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர்‌ செல்லும் பாதாள சாக்கடை அவ்வபோது அடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயமும் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டதால், நகராட்சி அதிகாரிகள், பிள்ளையார் கோவில் தெருவிற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News