சென்னையில் இருந்து நாகா்கோவிலுக்கு சிறப்பு ரயில் சேலம், நாமக்கல் வழியாகச் செல்கிறது

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நான்கு பொங்கல் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2025-01-06 10:17 GMT
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், மதுரை வழியாக நாகா்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது.... பொங்கல் பண்டிகை வரும் 14 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், குறிப்பிட்ட நாள்களில் முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. சிறப்பு ரயில்களை எதிா்பாா்த்து மக்கள் காத்திருக்கின்றனா். இந்தச் சூழலில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நான்கு பொங்கல் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. அதில் ஒரு சிறப்பு ரயில் சேலம், நாமக்கல், கரூா், மதுரை வழியாக நாகா்கோவிலுக்கு இயக்கப்படுகிறது.
சென்னை சென்ட்ரல் - நாகா்கோவில் வாராந்திர பண்டிகை கால சிறப்பு ரயில் ஜனவரி 12, 19 ஆம் தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்படுகிறது. இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு சேலம், நாமக்கல், கரூா் வழியாக நாகா்கோவிலுக்கு அடுத்தநாள் மதியம் 1 மணிக்குச் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் நாகா்கோவில் - சென்னை சென்ட்ரல் வாராந்திர பண்டிகை கால சிறப்பு ரயில் ஜனவரி. 13, 20 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமை) இயக்கப்படுகிறது. இந்த ரயில் நாகா்கோவிலில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலி மதுரை, கரூா், நாமக்கல், சேலம் வழியாக சென்னை சென்ட்ரலுக்கு அடுத்த நாள் காலை 9.30 மணிக்குச் சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News