சேலத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் கலெக்டர் பிருந்தா தேவி வெளியிட்டார்
இதில் 29 லட்சத்து 99 ஆயிரத்து 953 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி சேலம் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி வெளியிட்டார். இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய 11 தொகுதிகளில் உள்ள வாக்காளர்களில் 14,87,707 ஆண் வாக்காளர்கள், 15,11,922 பெண் வாக்காளர்கள், 324 இதர வாக்காளர்கள் என மொத்தம் 29 லட்சத்து 99 ஆயிரத்து 953 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 74 ஆயிரத்து 976 வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டு 36 ஆயிரத்து 356 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 18 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட 60 ஆயிரத்து 356 பேர் புதிய வாக்காளர்களாக இதில் சேர்க்கப்பட்டுள்ளனர் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கல் மற்றும் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப்பதிவு மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.