கோவை: ஆசிரியர் பணிக்காக பெண் தர்ணா !
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும், 10 ஆண்டுகளை கடந்தும் வேலை கிடைக்கவில்லை என பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பல ஆண்டுகளாக வேலைக்காக காத்திருந்த பெண் ஒருவர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென இன்று தரையில் அமர்ந்து கண்ணீர் மல்க தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தாலும், அரசு குறைவான பணியிடங்களை மட்டுமே நிரப்புவதாகவும், இதனால் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.கோவை அன்னூர் பகுதியைச் சேர்ந்த செல்வி என்ற பெண், ஆசிரியர் பயிற்சி முடித்து எம்.ஏ., எம்.எட் பட்டம் பெற்றுள்ளார். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 10 ஆண்டுகள் கடந்தும் தனக்கு வேலை கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தார். தற்போது கர்ப்பிணியாக இருந்தபோது தேர்ச்சி பெற்றதாகவும், தற்போது தனது மகன் ஆறாம் வகுப்பு படிப்பதாகவும், இன்னும் வேலை கிடைக்காததால் தொடர்ந்து படித்து வருவதாகவும் வேதனையுடன் கூறினார். நியமனத் தேர்வு முடிவுகள் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அரசு தனது கோரிக்கையைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.இந்த சம்பவம், தமிழகத்தில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தாலும், தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை கிடைப்பதில் ஏற்படும் தாமதம் குறித்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.