வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும்

அரசியல்;

Update: 2025-02-03 15:25 GMT
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார் எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவர் நெல்லை முபாரக். தஞ்சாவூர் திலகர் திடலில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. வக்பு உரிமை மீட்பு மாநாட்டில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள சிறுபான்மை மற்றும் மக்கள் விரோத வக்பு திருத்தச் சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். சிறுபான்மை சமூகத்தினரின் சொத்தான நாடு முழுவதும் உள்ள சுமார் 8 லட்சம் ஏக்கர் நிலங்களைத் திருடுகிற வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டம் அமைந்துள்ளது. அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையை மீறுகிற வகையில் இச்சட்டம் உள்ளது. இதை ஒருபோதும் ஜனநாய சக்திகள் ஏற்காது. நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் அனுமதியை மீறியும், எதிர்க்கட்சிகளின்  பல்வேறு உறுப்பினர்கள் எதிர்த்த பின்னரும் கூட இச்சட்டத்தை மத்திய அரசு வலுக்கட்டாயமாக முன் வைத்துள்ளது. எனவே, இந்தச் சட்டத்திருத்தத்தை ரத்து செய்கிற வகையிலான நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் செய்ய வேண்டும். இந்தத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மிகப் பெரிய அளவில் போராட்டங்களை நடத்துவோம். மேலும், தமிழக அரசு வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாட்டில் வக்பு சொத்துகளைப் பாதுகாக்கிற வக்பு வாரியத்தில் மிகப் பெரிய அளவில் நிர்வாகச் சீர்கேடு நிகழ்ந்துள்ளது. எனவே, வக்பு வாரியத்தைச் சீரமைக்கிற நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார் நெல்லை முபாரக். இந்த மாநாட்டில் ஜோதிமலை இறைபணி திருக்கூடம் நிறுவனர் தவத்திரு. திருவடிக்குடில் சுவாமிகள், மூத்த வழக்குரைஞர் பவானி பா. மோகன், மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் த. ஜெயராமன், எஸ்.டி.பி.ஐ. மாநிலப் பொதுச் செயலர் ஏ. அபுபக்கர் சித்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News