வடகிழக்கு பருவமழை விவசாயிகளுக்கு இழப்பீடுத் தொகை வழங்கப்பட உள்ளது மாவட்ட ஆட்சியர் தகவல்.
நாமக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.4.07 இலட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட உள்ளது. மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தகவல்.;

நாமக்கல் மாவட்டம், மோகனூர் மற்றும் எருமப்பட்டி வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று மாவட்ட ஆட்சியர் வடகிழக்கு பருவ மழை 2024-ல் பாதிக்கப்பட்ட வேளாண் பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து கள ஆய்வு மேற்கொண்டார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வடகிழக்கு பருவமழையால் மோகனூர் வட்டாரத்தில் 26 விவசாயிகள், எருமப்பட்டி வட்டாரத்தில் 13 விவசாயிகள் என மொத்தம் 39 விவசாயிகள் 23.955 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்த நெல், சோளம், மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட வேளாண் பயிர்கள் சேதமடைந்தன. இதனைத் தொடர்ந்து, பருவமழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையாக ரூ.4,07,235/- வழங்கப்பட உள்ளதால், மாவட்ட ஆட்சியர் வேளாண் அலுவலர்களுடன் கள ஆய்வு மேற்கொண்டு, பாதிப்படைந்த விவசாயிகளின் எண்ணிக்கை, சாகுபடி செய்யப்பட்டுள்ள பரப்பளவு, வேளாண் பயிர்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை வேளாண் அலுவலரிடம் கேட்டறிந்தார். அதன்படி, எருமப்பட்டி வட்டாரம், கொடிக்கால்புதூர், மோகனூர் வட்டம், நா.புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை மாவட்ட ஆட்சியர் நிவாரண உதவி வழங்குவது குறித்து நேரில் கள ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, சேந்தமங்கலம் பேரூராட்சி பகுதியில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பில் அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் புதியதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தில் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திடும் வகையில் சமுதாய கூடத்தினை சுத்தகமாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்று வருவதையொட்டி விவசாயிகளுடன் கலந்துரையாடினார். கூட்டுறவு விற்பனை சங்க கிடங்கில் முதல்வர் மருந்தகத்தில் மருந்து பொருட்களின் இருப்பு, விற்பனை விபரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, மோகனூர் வட்டம், நா.புதுப்பட்டி, கணபதி நகரில் புதிய மின்னணு குடும்ப அட்டை கோரி வரப்பெற்ற விண்ணப்பதாரர் இல்லத்திற்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் வேளாண்மை க.இராமச்சந்திரன், வேளாண்மை துணை இயக்குநர் கவிதா, வட்டாட்சியர் க.மதியழகன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.