கொடுங்கையூர், கோவை, மதுரையில் குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை கொடுங்கையூர், கோவை, மதுரையில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்” என்று பேரவையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.;

Update: 2025-03-19 15:47 GMT
கொடுங்கையூர், கோவை, மதுரையில் குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு
  • whatsapp icon
சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 19) கேள்வி நேரத்தின்போது கம்பம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. நா.ராமகிருஷ்ணன் பேசுகையில், “கம்பம் தொகுதி, கம்பம் நகராட்சியில் திடக்கழிவில் இருந்து உரம் தயாரித்து விவசாயிகளுக்கு விலையின்றி வழங்க அரசு ஆவன செய்யுமா? என கேள்வி எழுப்பினார். அதற்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பதில் அளிக்கையில், “நகரங்களை விரிவாக்கம் செய்யும்போது குப்பை கொட்டும் இடம் நகரின் மையப் பகுதிக்கு வந்துவிடுகிறது. அதனால் மக்கள் குப்பை கொட்டும் இடத்தை அப்புறப்படுத்தச் சொல்கிறார்கள். மாற்று இடம் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. அரசு இடமாக இருந்தால் பிரச்சினை இல்லை. தனியார் இடத்தை விலை கொடுத்து வாங்க அரசு தயாராக இருக்கிறது. குப்பை கொட்டும் இடத்தில் இருந்து குப்பைகள் வெளியே பறக்காமல் இருப்பதற்காக அதைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்படுகிறது. சென்னை கொடுங்கையூர், கோவை, மதுரையில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்தார். நடமாடும் ரேஷன் கடை: பேரவையில் நாகர்கோவில் தொகுதி பாஜக உறுப்பினர் எம்.ஆர்.காந்தி பேசுகையில், “நாகர்கோவில் தொகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நடமாடும் நியாய விலைக் கடை அமைக்க அரசு ஆவன செய்யுமா” என கேள்வி எழுப்பினார்.அதற்கு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பதில் அளிக்கையில், “நாகர்கோவில் தொகுதியில் நடமாடும் நியாய விலைக் கடை அமைக்கும் சாத்தியம் இல்லை. இருப்பினும், ஆந்திராவில் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. அதனால் உணவுத் துறை அதிகாரிகள் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு சென்று அங்கு செயல்படுத்தப்படும் நியாய விலைக் கடை பொருட்கள் விநியோகம் குறித்து ஆய்வு செய்யவுள்ளனர். அதன்பிறகு அதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்தார்.

Similar News