பெருமாநல்லூர் அருகே போலி பெண் மருத்துவர் கைது
பெருமாநல்லூர் அருகே போலி பெண் மருத்துவர் கைது. மருத்துவமனை மற்றும் மருந்து விற்பனை நிலையத்திற்கு, திருப்பூர் மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சீல்.;

திருப்பூர் மாவட்ட ஊரக நலப் பணிகள் இயக்குனரகம் சார்பில் திருப்பூர் மாவட்ட மற்றும் மாநகர பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களில் தொடர் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே குன்னத்தூர் சாலை தட்டாங்குட்டை என்கிற பகுதியில், மருத்துவம் படிக்காமல் கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்து வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதை அடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் மீரா தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது தட்டாங்குட்டை பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வந்த எஸ் எம் கிளினிக் மற்றும் மருந்து கடையில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு நிம்மி (எ) நிம்மி ஜோஸ் (38) என்பவர் நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்து வருகிறார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள மருந்து சீட்டில், நிம்மி MBBS MD என குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து அவரிடம் விசாரித்த போது அவரிடம் அதற்கு சரியான பதில் இல்லை. மேலும் அவர் வைத்திருந்த மருத்துவம் சார்ந்த படிப்புகள் பட்டங்கள் அனைத்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்து போலியாக தயாரிக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் பெருமாநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போலி மருத்துவர் நிம்மியை கைது செய்தனர். தொடர்ந்து கிளினிக் மற்றும் மருந்தகத்தை பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஊரக நலப்பணி அதிகாரிகள் கூறுகையில், மாவட்ட ஆட்சியருக்கு வந்த புகாரை அடுத்து, சம்பந்தப்பட்ட கிளினிக்கு சோதனைக்கு சென்றோம். எங்களில் ஒருவர் பொதுமக்கள் போல் மருத்துவம் பார்ப்பதற்காக அவரிடம் சென்றபோது ரத்த குறைபாடு உள்ளது அதற்காக நான்கு வாரங்கள் இன்சுலின் எடுக்க வேண்டும் என்று கூறியதுடன் அவருக்கு ஊசி போடுவதற்காக தயாரானார். அப்பொழுது அவரை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினோம். கடந்த எட்டு மாதங்களாக இதே பகுதியில் இவர் கிளினிக் நடத்தி வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுதும் இதுபோன்ற தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.