தெரு நாய் கடித்து சிறுமி படுகாயம்
மதுரை அருகே தெரு நாய் கடித்ததில் சிறுமிக்கு படுகாயம் ஏற்பட்டது.;
மதுரை திருப்பரங்குன்றம் அருகே கீழமாத்தூர் கிராமம் அஷ்டலட்சுமி நகரை சேர்ந்த பழனியின் மகள் கிரிஜா(7) என்ற சிறுமி நேற்று (ஏப்.9)மாலை தனது வீட்டருகே விளையாடி கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த தெரு நாய் சிறுமியை கடித்து முட்புதருக்குள் இழுத்து சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் நாயை விரட்டி சிறுமியை மீட்டு கீழமாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு சிறுமி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தெரு நாய் கடித்ததில் சிறுமிக்கு தொடை, இடுப்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சிறுமியை நாய் கடித்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.