சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவலம் - முறையற்ற சிகிச்சை அளிப்பதாக புகார்
சிவகங்கையில் மாற்றுத்திறனாளி பெண்ணை வெளியேற்றிய மருத்துவக் கல்லூரி நிர்வாகம் - ஆட்சியர் நடவடிக்கை;

சிவகங்கை செந்தமிழ்நகர் பகுதியை சேர்ந்தவர் உமாதேவி, இவரது அக்காள் மகள் 38 வயதான வைதேகி. இவர் மனநலம் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளியாவார். வைதேகியின் தாயார் உடல் நிலை சரியில்லாதவர் என்பதால் சித்தியான உமாதேவியே வைதேகியை வைத்து பராமரித்து வருகிறார். இந்நிலையில் வைதேகிக்கு அன்மையில் தொடர் வயிற்று வலி ஏற்பட்டதின் காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்ததில் அவரது வயிற்றில் கட்டி இருப்பது தெரியவரவே கடந்த 4 ஆம் தேதி சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 ஆம் தேதி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டு கட்டியை அகற்றியுள்ளனர். பின்னர் ஐ.சி.யூவில் வைத்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் அங்கு வைதேகிக்கு சிகிச்சை அளித்து வந்த பயிற்சி மருத்துவர் முறையாக சிகிச்சை அளிக்காததால் அங்கிருந்த மூத்த செவிலியர் ஒருவர் பயிற்சி மருத்துவரை கண்டித்ததாக கூறப்படும் நிலையில், செவிலியரிடம் வைதேகியின் சித்தியான உமாதேவி புகார் செய்ததாலேயே தன்னை திட்டியதாக என்னிக்கொண்ட பயிற்சி மருத்துவர் உமாதேவி மற்றும் வைதேகி மீது ஆத்திரமடைந்து அடிக்கடி கடுமையாக நடந்துகொண்டுள்ளார். மேலும் முழுமையான சிகிச்சை அளிக்காமல் கைகளில் குளுக்கோஸ் ஏற்றுவதற்கு பயன்படுத்திய வென்பிளாண்டை கூட அகற்றாமல் உடனடியாக மருத்துவமனையில் இருந்து வெளியேற்றியும் உள்ளார். இதனால் செய்வதறியாது தவித்த உமாதேவி தனது அக்காள் மகளை அழைத்துக்கொண்டு சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் வந்ததுடன் ஆட்சியர் ஆஷா அஜித்தை சந்தித்து மனு அளித்தார். இதனையடுத்து மருத்துவக்கல்லூரி துனை முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை மண்டல மருத்துவ அதிகாரியை அழைத்து ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதை தொடர்ந்து அவரை மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை சிகிச்சை அளிக்காமல் மருத்துவர் வெளியேற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.