தாமிரபரணி ஆற்றுப் பாலத்தை சரிசெய்ய வேண்டும்:சமக கோரிக்கை
ஆத்தூர் தாமிரபரணி புதிய ஆற்றுப் பாலத்தை சரிசெய்ய வேண்டும் என்று சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;
தூத்துக்குடி மாவட்ட சமக செயலாளர் அற்புதராஜ் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், "கடந்த 2023 டிசம்பர் மாதம் ஏற்பட்ட கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் புதிதாக கட்டப்பட்ட ஆத்தூரில் தாமிரபரணி ஆற்றுப் பாலம் நடு பகுதி கான்கிரீட் தூண் வழுவிழந்து பூமியில் இறங்கியதால் மிகவும் அபாய நிலையினை அடைந்து உடனடியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பழைய பாலத்தில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. இன்று வரை பழுதான ஆற்றுப்பாலத்தை சரிசெய்யவில்லை. அந்த வழியாகத்தான் ஆன்மீக தளமான திருச்செந்தூர், மணப்பாடு, உவரி செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா செல்லும் வாகனங்கள் தினசரி ஆயிரக்கணக்கில் சென்று வருகின்றன. இதனால் மிக பெரிய போக்குவரத்து நெருக்கடியும், பழைய பாலத்தில் முறையான தடுப்பு சுவர்கள் இல்லாததால் மிக பெரிய ஆபத்துகளும், வாகன விபத்துகளும் எற்படுகிறது. ஆகவே இதற்கு மேலும் தாமதிக்காமல் போர்க்கால அடிப்படையில் பழுதாகி காட்சிப்பொருளாக நிற்க்கும் ஆத்தூர் தாமிரபரணி புதிய ஆற்றுப்பாலத்தை சரி செய்து மக்கள் பயன்பாட்டுக்கும் சீரான போக்குவரத்திற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.