அழுகிய நிலையில் மாம்பழங்கள்

வாங்க ஆள் இல்லாமல் அழுகிய நிலையில் குப்பை தொட்டியில் கொட்டப்படும் மாம்பழங்கள்ஈரோடு மார்க்கெட் வியாபாரிகள் கடும் பாதிப்பு;

Update: 2025-07-01 07:27 GMT
ஈரோடு வ.உ.சி பூங்காவில் செயல்பட்டு வரும் காய்கறி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் மாம்பழங்களை வாங்க ஆளில்லாமல், அவை அழுகிய நிலையில் குப்பைத்தொட்டியில் கொட்டப்பட்டு வருவதால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சேலம், கிருஷ்ணகிரி,தர்மபுரி திருப்பத்தூர், வேலூர், நாமக்கல், திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக அதிக அளவில் மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை, சத்தியமங்கலம், தாளவாடி, கோபி, அந்தியூர், அம்மாபேட்டை, குருவரெட்டியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கணிசமான அளவில் மாம்பழம் நடப்பாண்டில் சாகுபடி செய்யப்பட்டது.தற்போது, மாம்பழம் சீசன் தொடங்கி இருக்கும் நிலையில், மாம்பழங்களுக்கு உரிய விலை கிடைக்காமல், விவசாயிகள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.குறிப்பாக, ஈரோடு மார்க்கெட்டில் அதிகளவில் மாம்பழங்கள் வரத்தாகி இருக்கும் நிலையில், அந்த பழங்களை வாங்க ஆளில்லாமல், அவை அழுகிய நிலையில் குப்பைத்தொட்டிகளில் வியாபாரிகள் கொட்டி வருகின்றனர்.இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது ஈரோடு மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மாம்பழம் தோப்புகளில் பராமரித்து வரப்படுகின்றன. ஆண்டுதோறும் மார்ச் முதல் ஜூலை மாதம் வரையிலான மாம்பழ சீசனில், 50 ஆயிரம் டன் அளவிற்கு மாம்பழங்கள் விளைகின்றன.ஈரோடு மாவட்டத்தில் 15 டன் முதல் 30 டன் அளவிலான மாம்பழங்கள் மட்டுமே விற்பனையாகின்றன. மீதமுள்ள மாம்பழங்கள், ஆந்திர மாநிலம் புத்துார், சித்தூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் மாம்பழச்சாறு ஆலைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது.தற்போது, தமிழ்நாட்டில் விளைவிக்க கூடிய மாம்பழங்கள் ஆந்திராவில் கொள்முதல் செய்யததால், மார்க்கெட்டிற்கு அதிகளவில் மாம்பழங்கள் வரத்தாகி உள்ளன. இதனால் மாம்பழங்கள் விலை வெகுவாக குறைந்து விட்டது. இருப்பினும், மாம்பழங்களை வாங்க ஆளில்லாமல், அவை அழுகிய நிலையில் குப்பைத்தொட்டியில் போடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.மேலும் சில வியாபாரிகள் விற்பனையாகாத மாம்பழங்களை ஏரியிலும், குளத்திலும் கொட்டி வருகின்றனர். இதனால், மாம்பழ விவசாயிகள் மட்டுமின்றி, வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். இவ்வாறு வியாபாரிகள் தெரிவித்தனர்.

Similar News