தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதிகளை வழங்காமல் இருப்பது குறித்து

ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை செய்து வருகிறோம் -அமைச்சர் தகவல்;

Update: 2025-07-05 07:00 GMT
தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்த ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை, நாகை மாவட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். நாகை தாமரைக்குளம், தெத்தி, நாகூர், திட்டச்சேரி, திருமருகல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், அமைச்சர் பொதுமக்களை வீடு வீடாக சென்று சந்தித்து பரப்புரை மேற்கொண்டார். பின்னர், அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது நாங்கள் செல்லும் இடமெல்லாம் மக்கள் மகிழ்ச்சியடைவதை தமிழக முதலமைச்சரின் உழைப்பிற்காக கிடைத்த வெற்றியாக பார்க்கிறோம். செல்லும் சில இடங்களில் கலைஞர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்று சொல்கிறார்கள். விடுபட்டவர்களுக்கு விரைந்து வழங்கப்படும். மக்களின் பாராட்டுக்களை மட்டுமின்றி, அவர்கள் கூறும் குறைகளையும் கேட்டறிந்து அதனை சரி செய்து கொடுக்கிறோம். மக்களிடம் நேரடியாக முதல்வர் வீடியோ காலில் பேசுவதால், மக்களின் குறைகளை முதல்வர் நேரடியாக கேட்க வாய்ப்பு கிடைக்கிறது. மாற்று கட்சியை  சேர்ந்தவர்களுடைய வீடுகளுக்கும் சென்று பரப்புரை செய்கிறோம். அவர்களை சந்தித்து பாஜக தமிழ்நாட்டிற்கு செய்யும் துரோகங்களை பிரசாரம் செய்கிறோம். சாதி, மதம், கட்சி வேறுபாடு இல்லாமல் அனைவரையும் சென்று பார்க்க சொல்லியுள்ளார் தமிழக முதலமைச்சர். கல்வி நிதி, இயற்கை பேரிடர் நிதி என தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதிகளை வழங்காமல் இருப்பது குறித்தும் மக்கள் மத்தியில்  எடுத்துரைத்து ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News