தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி
சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம்;
தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி சேலம் கோட்டை பகுதியில் நேற்று பட்டியலின, பழங்குடியினர் பணிக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் மறைமாவட்ட முதன்மை குரு மைக்கேல்ராஜ் செல்வம் தலைமை தாங்கினார். ஓமலூர் செயின்ட் ஜோசப் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை இயக்குனர் விமல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.சி., எஸ்.டி. பணிக்குழு செயலாளர் கிரகோரிராஜன், சேலம் குழந்தை இயேசு பேராலயம் நிர்வாகி ஜெய் பெர்னார்டு ஜோசப், மறைமாவட்ட முதன்மை குரு அழகுசெல்வன், சேலம் சமூக சேவை மையத்தின் இயக்குனர் டேவிட் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கிறிஸ்தவர்களின் உரிமையை பறிக்கக்கூடாது. தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.