சேலத்தில் திருட்டு, அடிதடி, கஞ்சா வழக்கில் தலைமறைவான
3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
சேலம் கந்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் குமரவேல் (வயது 26). இவர் மீது அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு அடிதடி வழக்கில் சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரவேலை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சேலம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. ஜாமீனில் வந்த குமரவேல், சிறைக்கு செல்லாமல் தலைமறைவானார். அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதையடுத்து போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவான குமரவேல் சூரமங்கலம் பகுதியில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் குமரவேலை கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர். இதே போன்று சேலம் அம்மாபேட்டை புதுத்தெருவை சேர்ந்தவர் சோழன். இவருடைய மகன் பார்த்திபன் (20). கஞ்சா விற்ற வழக்கில் அம்மாபேட்டை போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து ஜாமீனில் வந்தவர் தலைமறைவானார். அவரை பிடிக்க கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இந்த நிலையில் வீட்டில் பதுங்கி இருந்த பார்த்திபனை போலீசார் நேற்று பிடித்து கோர்ட்டில் ஒப்படைத்தனர். சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்தவர் சங்கர் (33). திருட்டு வழக்கில் கிச்சிப்பாளையம் போலீசார் சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வந்து தலைமறைவாக இருந்த சங்கரை கிச்சிப்பாளையம் போலீசார் நேற்று கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.