தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம் திருச்சிற்றம்பலம் அருகில் உள்ள களத்தூர், கல்லூரணிக்காடு மற்றும் பழைய நகரம் ஆகிய மூன்று ஊராட்சி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் களத்தூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்புத் திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு பேராவூரணி வேளாண்மை விற்பனைக் குழு தலைவர் க.அன்பழகன் தலைமை வகித்தார். பேராவூரணி வட்டாட்சியர் நா.சுப்ரமணியன், பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், ஆதார் அட்டைகள் திருத்தம், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய நூற்றுக்கணக்கான கோரிக்கை மனுக்களை பொது மக்கள் வழங்கினர். மேலும், பல்வேறு அரசுத் துறைகளின் அலுவலர்கள் நேரில் வந்து பொது மக்களின் கோரிக்கைகளை மனுவாக பெற்று அதனை கணினியில் பதிவு செய்து மனுவிற்கு தீர்வு வழங்கும் பணியில் ஈடுபட்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வேந்திரன், சாமிநாதன் ஆகியோர் மேற்பார்வையில் ஒன்றிய அலுவலர்கள், பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய ஊராட்சிகளின் செயலர்கள் செய்திருந்தனர்.