கீழ வெளியூரில் மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

திருச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை;

Update: 2026-01-22 15:59 GMT
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கல்லடை ஊராட்சி கீழவெளியூர் பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் அன்பரசன் (33). இவர் டி.எம்.இ படித்து விட்டு தோகைமலையில் ஆண்களுக்கான ஆடைகள் விற்பனை கடை நடத்தி வந்தார். பழனி மலை கோவிலுக்கு நடைபயணம் செல்வதற்காக மாலை அணிந்து கடந்த 17ஆம் தேதி அன்று தனது ஊரைச் சேர்ந்த முருக பக்தர்களோடு பாதையாத்திரை சென்றார். தொடர்ந்து திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே ஆலத்தூர் சாலையில் சென்ற போது அன்பரசன் மீது இருசக்கர மோட்டார் வாகனம் மோதியதில் தலையில் உள்காயம் ஏற்பட்டு மயங்கிய நிலையில் கிடந்து உள்ளார். அன்பரசனை மீட்டு மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்று உள்ளனர். அதனை தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்று கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அன்பரசனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டதால் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் அன்பரசனின் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர். பின்னர் இன்று காலை அன்பரசனின் கல்லீரல், இரண்டு கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் தோல் தானமாக பெறப்பட்டது. திருச்சி அரசு மருத்துவர்கள் அவரின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பிறகு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களும் ஊர்வலமாக மருத்துவமனை வெளிப்புறம் வரை சென்று வாகனத்தை அனுப்பி வைத்தனர். அதன் பிறகு அவரின் சொந்த ஊர் கீழவெளியூர் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தகவல் அறிந்த குளித்தலை வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் உடல் உறுப்பு தானம் செய்த அன்பசரனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செலுத்தினர்.

Similar News