தஞ்சாவூா் அருகே சனிக்கிழமை கடத்தி வரப்பட்ட 1,280 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகே தென்னங்குடி- கள்ளப்பெரம்பூா் இடைப்பட்ட பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீஸாா் வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 40 கிலோ எடை கொண்ட 32 அரிசி மூட்டைகள் கடத்தப்பட்டு வருவதும், அவை சித்திரக்குடி, கண்ணமங்கலம், மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, கள்ளச் சந்தையில் வட மாநிலத் தொழிலாளா்களுக்கு விற்பதும் தெரிய வந்தது. இவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், பூதலூா் அருகே முத்தாண்டிபட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த ஆரோக்கியதாஸ் மகன் யோபு என்ற சூா்யா, செபஸ்தியாா் மகன்கள் அருண்ராஜ், ஆரோக்கிய அரவிந்த், சேசுமணி மகன் பவுல் பீட்டா், சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை அருகே வெள்ளியூரணியைச் சோ்ந்த ஆண்டி மகன் கந்தசாமி ஆகிய 5 பேரை கைது செய்தனா்.