குமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் சார்லஸ் மனைவி சகாய அகிலா (44). இவர் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். மேலும் தனியார் அமைப்பு ஒன்றின் நாகர்கோவில் மாநகர் தலைவராக உள்ளார். இதே அமைப்பில் மீனவர் பிரிவு தலைவராக உள்ள மோகன் குமார் என்பவர் சகாய அகிலாவிடம் தனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் ஏராளமானவர்களுக்கு அரசு வேலை வாங்கி கொடுத்து உள்ளதாக கூறி, திருநெல்வேலி மாவட்டம் இடையான்குளத்தை சேர்ந்த பாரதி என்பவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அப்போது சகாய அகிலாவுக்கு டிஎன்பிஎஸ்சி வழியாக அரசு வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்து 2 லட்சம் ரூபாய் பணத்தை பாரதி வாங்கி கணக்கு மூலம் வாங்கியுள்ளார். பணம் அனுப்பிய சில மாதங்களில் அரசு துறை வேலைக்கான ஆணையை வாட்ஸ் அப்பில் அனுப்பி வேலையில் சேருமாறு பாரதி கூறியுள்ளார். அந்த ஆணையை எடுத்து திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சகாய அகிலா சென்றுள்ளார். அப்போது அது போலி பணி நியமன ஆணை என்பது தெரியவந்துள்ளது. ஏமாற்றப்பட்ட அகிலா பணத்தை திருப்பித் தர மோகன் குமார் மற்றும் பாரதியை சந்தித்து கேட்டுள்ளார். ஆனால் இருவரும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதையடுத்து நம்பிக்கை மோசடி செய்ததாக சகாய அகிலா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வடசேரி போலீசார் இருவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.