விருதுநகரில் மாநில அளவிலான 2- ஆவது திருக்குறள் மாணவர் மாநாடு தொடக்கம்*
விருதுநகரில் மாநில அளவிலான 2- ஆவது திருக்குறள் மாணவர் மாநாடு தொடக்கம்*;
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில், தமிழ்நாடு முழுவதிலிருந்தும் தமிழ்மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் பங்குபெறும் மாநில அளவிலான 2- ஆவது திருக்குறள் மாணவர் மாநாடு - 2025- ஐ மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், தொடங்கி வைத்தார். அறநெறிகளை பற்றிய உலகின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக கருதப்படும் திருக்குறளின் தொன்மை மற்றும் மாண்பினை பறைசாற்றும் விதமாக "தீராக் காதல் திருக்குறள்" திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கிடையே திருக்குறளின் அடிப்படையில் வாழ்வியல் கோட்பாடுகளை அடித்தளமாக அமைத்து, அவர்களின் எதிர்காலத்தையும், சமுதாயத்தையும் செழுமைப்படுத்தும் முயற்சியாக, தமிழ்த் திறனறிவுத் தேர்வு-2024-ல் வெற்றி பெற்ற தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களையும் அழைத்து இன்றும் நாளையும் “திருக்குறள் மாணவர் மாநாடு 2025" என்ற நிகழ்வு, விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர் ஜெயசீலன்.... தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் மூலமாக திருக்குறளையும், தமிழ் இலக்கியத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது என்றும் எதிர்காலத்தில் யாரெல்லாம் சிறப்பாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறதோ, அத்தகைய மாணவர்களை முன் பருவத்திலிருந்தே அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முழுவதும் 1500 மாணவர்களை தேர்ந்தெடுக்கக்கூடிய தமிழ் திறனறி தேர்வை பள்ளிக்கல்வித்துறை நடத்துகிறது என்றார். தமிழ் இலக்கியத்தில் இருக்கக்கூடிய பெருமைகளை நன்கு தெரிந்து கொண்டு அடுத்த 50, 60 ஆண்டுகளுக்கு தங்களுடைய வாழ்க்கையில் எப்போதெல்லாம் வாய்ப்புகள் கிடைக்கின்றதோ, அப்போதெல்லாம் மொழியை, இலக்கியத்தை, தமிழ் மொழி தரக்கூடிய வழுமியங்களை, திருக்குறள் தரக்கூடிய உயர்ந்த செம்மார்ந்த அனுபவங்களை, மாணவர்கள் கைக் கொண்டு உயர்வதற்கும், வழி காட்டுவதற்கும் இந்த நிகழ்ச்சி உறுதுணையாக அமையும் என தெரிவித்தார். இந்த மாநாடு துவக்க விழா நிகழ்ச்சியில், நிதியமைச்சர் தங்கம்தென்னரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் காணொளி காட்சி வாயிலாக சிறப்புறை ஆற்றினார்கள்...