குமரி மாவட்டம் இரணியல் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (35). இவர் ரயில்வேயில் கீ மேனாக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை ஒழுகினசேரி ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தண்டவாள பராமரிப்பு பணியில் இருந்தார். அப்போது இரண்டு வாலிபர்கள் அந்த பகுதிக்கு வந்து சுதாகரிடம் தீப்பெட்டி பற்றி இருக்கிறதா? புகையிலை பாக்கெட், சிகரெட் உள்ளதா? என்று கேட்டு வம்புக்கு இழுத்துள்ளனர். சுதாகர் அப்படி எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் அந்த வாலிபர் கோபத்தில் நாங்கள் பைக்குக்கு பெட்ரோல் போட வேண்டும் ரூ.50 வேண்டும் என கேட்டுள்ளனர். அப்போது சுதாகர் தன்னிடம் பணம் இல்லை எனவும் கூறியுள்ளார். இதனால் இரு வாலிபர்களும் சுதாகரை வழிமறித்து, இருவரும் சேர்ந்து சுதாகரை கீழே தள்ளி கல்லால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் சுதாகர் படுகாயம் அடைந்தார். பின்னர் அவரை மிரட்டி விட்டு அந்த வாலிபர்கள் தப்பி சென்றுள்ளனர். படுகாயம் அடைந்த சுதாகர் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட வாலிபர்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.