தாராபுரம் அருகே வாலிபரிடம் செல்போன், ரொக்கபணம் பறித்த வழக்கில் 2-பேர் கைது!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் அருகே, வாலிபரிடம் செல்போன் மற்றும் ரொக்க பணத்தை பறித்து சென்ற வழக்கில் 2-பேரை போலீசார் கைது செய்தனர்.;

பல்லடம் அருகேயுள்ள கருடமுத்தூரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன், இவரது மகன் உதயபாரதி(25), விவசாயி. இவர் கடந்த 26-ம் தேதியன்று குண்டடம் அருகேயுள்ள மேட்டுக்கடையில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் படிக்கும் தனது உறவினர் மகனை அழைத்துச் செல்வதற்காக டூவீலரில் மேட்டுக்கடை வந்தார். மேட்டுக்கடை கொக்கம்பாளையம் ரோட்டில் சென்றபோது அங்கு நின்றிருந்த 2-பேர் ஏதோ அட்ரஸ் கேட்பது போல கேட்டுவிட்டு, திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை உதயபாரதியின் கழுத்தில் வைத்து மிரட்டி உதயபாரதி வைத்திருந்த 2-செல்போன்கள், ரொக்க பணம் ரூ. 10ஆயிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு, உதயபாரதியின் டூவீலர் சாவியை பறித்து தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து மாயமாகினர். இதுபற்றி உதயபாரதி குண்டடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் திருப்பூர்-தாராபுரம் ரோட்டில் வேங்கிபாளையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் டூவீலரில் வந்த 2-பேரை பிடித்து விசாரித்த போது, அவர்கள், திருப்பத்தூர், வாணியம்பாடியைச் சேர்ந்த விமல்(24), தேனியைச் சேர்ந்த காமுதுரை(24) என்பதும், இவர்கள் 2-பேரும் கடந்த 26-ம் தேதி குண்டடம் அருகே உதயபாரதியிடம் செல்போன்கள் மற்றும் ரொக்க பணம் திருடியது தெரிய வந்தது. 2-பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து செல்போன்கள், டூவீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்