வீட்டை விற்பது போல் நாடகமாடி ரூ. 23 லட்சம் மோசடி கணவன் மனைவி கைது
மண்டைக்காட்டில்
குமரி மாவட்டம் குளச்சல் லியோநகரை சேர்ந்தவர் வின்சென்ட் மனைவி ராணி (63). கணவர் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் ராணி தனியாக வசித்து வந்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ராணிக்கு மண்டைக்காடு புதூர் சி எஸ் ஆர் நகரை சேர்ந்த தம்பதி சகாயராஜ் (50) மற்றும் அவரது மனைவி சகாய பினிட்டா (38) ஆகியோர் அறிமுகமாகி, சகாய பிணிட்டா தனது வீட்டை விற்பதாக ராணியிடம் கூறியுள்ளார். அதற்கு ராணி சம்மதித்த நிலையில் 22.50 இலட்சம் விலை பேசி முன்பணமாக ரூ. 13 லட்சம் கொடுத்தார். பின்னர் மீதி தொகை கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி கொடுத்தார். இதற்காக சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்யப்படாத கிரயபத்திரம் செய்து கொண்டனர். சகாயராஜ் வீட்டை காலி செய்ய ஐந்து மாத கால அவகாசம் கேட்டுள்ளார். மேலும் அதுவரை வீடு ஒத்திக்கு இருப்பதாகவும் உடன்பாடு செய்தார். இதற்கான ஒத்தி தொகையை சகாய பின்னிட்டா , ராணியிடம் வழங்கினார். இந்த உடன்படிக்கையின் படி ஐந்து மாதம் கழித்து ராணி வீட்டை காலி செய்யுமாறு கூறிய போது அதற்கு சகாய பினிட்டா மறுத்துவிட்டார். மேலும் வீட்டை விற்பதற்காக ராணியிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இதை அடுத்து ராணி மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் இரு தரப்பையும் அழைத்து பேசினர். ஆனால் தீர்வு ஏற்படப்படவில்லை. இதையடுத்து ராணி கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி இரணியல் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மனுவை பரிசீலித்த கோர்ட் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து மண்டைக்காடு போலீசார் கடந்த மே மாதம் 1-ம் தேதி தம்பதி மீது நம்பிக்கை மோசடி பிரிவில் வழக்குப் பதிவு செய்தனர். இதை தொடர்ந்து ராணியிடம் வீட்டை விற்று, பணத்தை சுருட்டி சகாய பினட்டா மற்றும் சகாயராஜ் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின் சகாய பினிட்டா தக்கலை பெண்கள் சிறையிலும், சகாயராஜ் நாகர்கோவில் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.