ஆட்சியர் அலுவலகத்தை 500 மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகை..
தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிராம ஊராட்சிகளை நகராட்சி, பேரூராட்சிகளுடன் இணைத்து அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நகராட்சியுடன் கிராம பஞ்சாயத்துகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தை 500 மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகை.இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அடுத்துள்ள ஓடப்பள்ளி, காடச்சநல்லூர், சமயசங்கிலி, அக்ரஹாரம், தட்டாங்குட்டை, புதுப்பாளையம், உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த சூழலில், இந்த கிராம ஊராட்சிகளை பள்ளிபாளையம் நகராட்சியுடன் இணைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், தங்களது கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கிராம ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைப்பதால் தங்களது கிராமங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சலுகைகள் அனைத்து நிறுத்தப்படும் எனவும் நூறு நாள் வேலைத் திட்டம் ரத்து செய்யப்படுவதோடு தொழில் வரி, சொத்து வரி, வீட்டு வரி போன்றவை பன்மடங்கு உயரும் அபாயம் உள்ளது. விவசாய கூலித்தொழிலை மட்டும் நம்பியுள்ள பொதுமக்களை கொண்ட தங்களது பகுதிகளை நகராட்சியுடன் இணைப்பதை எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளதாகவும் அரசு அறிவித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அவ்வாறு ரத்து செய்யவில்லை எனில் வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் அட்டை போன்றவற்றை திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.