பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் உள்பட 4 பேர் கோர்ட்டில் ஆஜர்
சேலம் பெரியார் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் மீதான பாலியல் தொந்தரவு வழக்கு விசாரணையில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்ட 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர். வழக்கு விசாரணை 21ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் வரலாற்றுத்துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் இவர் மீது பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார். அதாவது, மாணவி தரப்பில் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலுவிடம் அளித்த புகாரில், தன்னை உதவி பேராசிரியர் பிரேம்குமார் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாகவும், இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் உத்தரவின்பேரில் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் புகார் செய்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி பேராசிரியர் பிரேம்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் புகார்தாரர் மற்றும் சாட்சிகள் அடிப்படையில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல், உதவி பேராசிரியர்கள் ரவிச்சந்திரன், ஜெயவீரதேவன் ஆகிய 4 பேர் ஆஜராகினர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி சுமதி வருகிற 21-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.