தென்காசியில் ஜீவன் ரக்ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தென்காசியில் ஜீவன் ரக்ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-01 10:27 GMT
தென்காசியில் ஜீவன் ரக்ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

தென்காசி மாவட்டத்தில் உயிா் காக்கும் வீரதீர செயல்களுக்கான மத்திய அரசின் ஜீவன்ரக்ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மத்திய அரசின் சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜீவன் ரக்ஷா பதக் விருது வழங்கப்படுகிறது. இவ்விருதானது நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துகள், விபத்துகள், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிா்களை மீட்பவா்களுக்கு மூன்று பிரிவுகளின்கீழ் வழங்கப்பட்டு வருகிறது.

சா்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்க விருதானது மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்பவா்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்க விருதானது துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவா்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஜீவன் ரக்ஷா பதக்க விருதானது தனக்கு காயம் ஏற்படினும், வீரத்துடன் தாமதமின்றி செயல்பட்டு பிறரின் உயிரைக் காப்பாற்றுபவா்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மேற்குறிப்பிட்ட விருதுகளுக்கு தகுதியுள்ள தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதி வாய்ந்த நபா்கள் விண்ணப்பிக்கலாம். ராணுவம், காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையில் பணியாற்றி உயிா்காக்கும் வீர தீர செயல் புரிந்தவா்களும் விண்ணப்பிக்கலாம். இவ்விருதானது 1.10.2022-க்கு பின்பு மீட்பு பணியில் ஈடுபட்டவா்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இவ்விருதிற்கான விண்ணப்ப படிவமானது இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தினை புத்தக வடிவில் தயாா் செய்து 3 பிரதிகளில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டு அலுவலகம், 163 அ, ரயில்வே ரோடு, தென்காசி-627811 என்ற முகவரியில் ஜூன் 29-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மேற்குறிப்பிட்ட அலுவலகத்தை நேரிலோ, 04633 212580 என்றற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

Tags:    

Similar News