இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து - மெக்கானிக் பலி
காரிப்பட்டி அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் காயமடைந்த மெக்கானிக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Update: 2024-04-23 02:41 GMT
சேலம் அருகே கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த லாரி மெக்கானிக் சந்துரு (வயது 45), அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினர் சுப்பிரமணி (40). இருவரும் உறவினர் ஒருவரது துக்க நிகழ்ச்சிக்காக அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த பூவனூர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். சுப்ரமணி மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.
மேட்டுப்பட்டி தாதனூர் அருகே அரூர் நெடுஞ்சாலையில் சென்ற போது அந்த வழியாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் காயம் அடைந்த சந்துரு, சுப்ரமணி இருவரையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சந்துரு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். சுப்ரமணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.