முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - கலெக்டர் ஆய்வு.
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட முத்துநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Update: 2024-01-07 01:30 GMT
அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய அடித்தட்டு மாணவ மாணவிகளின் நிலை உணர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ள இந்த முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் நகராட்சிக்குட்பட்ட 4 பள்ளிகளிலும், பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 16 பள்ளிகளிலும், ஊராட்சிகளுக்கு உட்பட்ட 247 பள்ளிகளிலும் என மொத்தம் 267 பள்ளிகளிளைச்சேர்ந்த 14,367 மாணவ மாணவிகள் இத்திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் தரமானதாகவும், சுவையாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவும், குறித்த நேரத்தில் மாணவர்களுக்கு உணவு கிடைக்கப்பெற வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட முத்துநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் குறித்தும், போதுமான அளவு பொருட்கள் இருப்பு உள்ளதா என்பது குறித்தும், பொருட்கள் வைத்திருக்கும் அறை தூய்மையாக உள்ளதா என்பது குறித்தும் விரிவாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவினை மாவட்ட ஆட்சித்தலைவர் சாப்பிட்டு பார்த்து, மாணவர்களுக்கு சுவையாகவும், சூடாகவும் மதிய உணவு வழங்க வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர், அங்கன்வாடி மையத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் குழந்தைகளுடன் கலந்துரையாடி, குறித்த நேரத்தில் உணவு வழங்கப்படுகின்றதா என்பது குறித்து கேட்டறிந்து, குழந்தைகளுக்கு சத்தான உணவினை தயார் செய்து வழங்க வேண்டும் என அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் நகராட்சி ஆணையர்.இராமர், பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.