அரசு மருத்துவமனையில் ஆட்சியர் திடீர் ஆய்வு
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேகரமாகும் குப்பைகளை உரிய வகையில் பிரித்து உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் என நகராட்சி ஆணையர் மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குநருக்கு ஆட்சியர் கற்பகம் உத்தரவிட்டார்.
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கற்பகம் மே - 30 தேதி இரவு நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார். அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் மருத்துவ மனை வளாகத்தை எப்போதும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், தினந்தோறும் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை, மருத்துவ கழிவுகள் என தரம் பிரித்து வைக்க வேண்டும் என்று அங்கு பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறித்தினார்.
அவ்வாறு முறையாக பிரித்து வைக்கப்படுகின்றதா என்பதை இணை இயக்குநர் கண்காணிக்க வேண்டும் என தெரிவித்த மாவட்ட ஆட்சியர் , தினந்தோறும் குப்பைகளை அகற்றி முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என்று நகராட்சி ஆணையர், நகராட்சி சுகாதார ஆய்வாளருக்கு உத்தரவிட்டார். மேலும் மருத்துவமனை வளாகம் முறையாக சுத்தம் செய்யப்பட்டு, மருத்துவ கழிவுகள் அகற்றப்பட்டு, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என பிரித்து அப்புறப்படுத்தப்பட்டு வளாகம் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை சார் ஆட்சியர் மற்றும் பெரம்பலூர் வட்டாட்சியர் வாரம் ஒருமுறை கட்டாயம் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, சுகாதாரத்துறை இணை இயக்குநர் மாரிமுத்து, நகராட்சி ஆணையர் ராமர், பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.