மதுரையில் பெட்டி,பெட்டியாக பட்டாசுகள் பறிமுதல்
மதுரையில் ஆம்னி பேருந்தில் உரிய ஆவணமின்றி பெட்டி பெட்டியாக எடுத்துசெல்லப்பட்ட பட்டாசுகளை பறக்கும்படையினர் பறிமுதல் செய்து, ஆந்திராவிற்கு தேர்தல் பயன்பாட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டதா ? என ஓட்டுனரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாண்டிக்கோவில் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்துவந்தபோது சிவகாசியில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற ஆம்னி பேருந்தை மடக்கி அதில் முழுவதுமாக சோதனை நடத்தினர். அப்போது பேருந்தில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றியும், விதிகளை மீறியும் 11 பெட்டிகள் முழுவதுமாக பட்டாசுகள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுபெட்டிகளை முழுவதுமாக சோதனை செய்தபின்னர் பறக்கும்படையினர் பட்டாசுபெட்டிகளை பறிமுதல் செய்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச்செல்லப்பட் பின்னர் வருவாய் கோட்டாச்சியர் ஷாலினியின் அனுமதியுடன் மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் பட்டாசுபெட்டிகள் ஒப்படைக்கப்பட்டது. முதற்கட்டமாக இந்த பட்டாசுபெட்டிகள் ஆந்திராவில் தேர்தல் காலத்தில் கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்த எடுத்துச்செல்ப்பட்டதா யார் அனுப்பியது என்பது குறித்து ஓட்டுனரிடமும், நடத்துனரிடமும் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.