பெயருடன் கூடிய பிறப்புச்சான்று பெற கால அவகாசம் நீட்டிப்பு
கன்னியாகுமரியில் பெயருடன் கூடிய பிறப்புச்சான்று பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின், அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதத்திற்குள் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமுமின்றி பெயர் பதிவு செய்திடலாம். 12 மாதங்களுக்குப்பின் பதினைந்து வருடங்களுக்குள் ரூ.200 கால தாமதக் கட்டணம் செலுத்தி குழந்தையின் பெயரினை பதிவு செய்திடலாம். 15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தையின் பெயரினைப் பதிவு செய்திட இயலாது.
குழந்தை பிறந்து 15 வருடங்கள் நிறைவடைந்த பின்னும் பெயர் பதிவு செய்யப்படாத நிகழ்வுகளுக்காக தமிழ்நாடு பிறப்பு இறப்பு விதிகள் 2000-ல் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மேலும் 5 ஆண்டுகள் (1-1-2020 முதல் 31-12-2024 வரை) கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற கால அவகாச நீட்டிப்புகள் வழங்கப்பட இயலாது என இந்திய தலைமைப்பதிவாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது. கால அவகாச நீட்டிப்பு நிறைவடைய இன்னும் சில மாதங்களே உள்ளன. 1-1-2000-க்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும், 1-1-2000-க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும், குழந்தையின் பெயர் வைத்து பிறப்புச் சான்றிதழ் பெற 31-12-2024 அன்று கடைசி நாளாகும்.
எனவே 31-12-2024-க்குள், பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு அப்பகுதிகளில் உள்ள தொடர்புடைய சார்பதிவாளர் அலுவலகங்களிலும், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் நிகழ்ந்த பிறப்புக்கு சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் மாநகராட்சிகளிலும் விண்ணப்பித்து பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி, குழந்தையின் பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை பெற்று, குழந்தையின் எதிர்கால நல்வாழ்விற்கு உதவிடும்படி அனைத்து தரப்பு பொது மக்களையும் கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.