காங்கிரஸ், திமுகவில் குடும்ப அரசியல்
காங்கிரஸ், திமுகவில் குடும்ப அரசியல்தான் தொடர்கிறது என சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் திமுகவில் குடும்ப அரசியல், ஊழல்தான் தொடர்கிறது என்றார் பாஜகவின் தமிழ்நாடு பொறுப்பாளரும், மக்களவைத் தேர்தலுக்கான இணை பொறுப்பாளருமான பி. சுதாகர் ரெட்டி. தஞ்சாவூரில் பாஜக வேட்பாளர் கருப்பு எம். முருகானந்தத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக திங்கள்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: தமிழ்நாட்டில் கள அளவில் பாஜகவுக்கு சாதகமாக உள்ளது. நாடு முழுவதும் மோடிக்கு ஆதரவான நிலையே நிலவுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஒரு ஊழல் கூட இல்லாமல் சிறந்த ஆட்சி நிர்வாகத்தை வழங்கியது. ஆனால் 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் ஊழல் நிறைந்து இருந்தது. தற்போது இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளில் குடும்ப அரசியல்தான் தொடர்கிறது. குடும்ப வளர்ச்சி, ஊழல் மேம்பாடு போன்றவற்றுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருகிறது. ஆனால் பாஜக நாட்டுக்கு சேவை செய்வதையே லட்சியம் என்ற அடிப்படையில் செயல்படுகிறது.
நாடு முழுவதும் பாஜகவுக்கு ஆதரவு நிலை நிலவுவதால் பாஜக மட்டுமே 370-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும். ஒட்டுமொத்தமாக தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேலாக வெற்றி பெறும். உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் நம் நாடு ஐந்தாம் இடத்தில் உள்ளது. மூன்றாவது முறையாக மோடி பிரதமராகும்போது உலக அளவிலான பொருளாதார வளர்ச்சியில் நம் நாடு மூன்றாம் இடத்தை அடையும். பல ஆண்டுகளாக இருந்து வந்த காஷ்மீர் விவகாரம், முத்தலாக் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு பிரதமர் மோடி தீர்வு கண்டார். ஒரு ரூபாய் வரி செலுத்தினால் 28 பைசா மட்டுமே மத்திய அரசு திருப்பிக் கொடுப்பதாகத் தமிழக முதல்வர் தவறான பிரசாரம் செய்து வருகிறார். கச்சத்தீவு பிரச்சனை குறித்து நாங்கள் மட்டும் பேசவில்லை. இந்தியா கூட்டணியில் உள்ள வைகோ உள்ளிட்டோரும் பேசுகின்றனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைப்பயணம் மூலம் இக்கட்சி அடித்தட்டு மக்களையும் சென்றடைந்துள்ளது. எனவே தஞ்சாவூர் உள்பட அனைத்து தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 502 வாக்குறுதிகளை அளித்துவிட்டு மக்களை ஏமாற்றிவிட்டது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், ஓய்வூதியர்கள் ஆகியோருக்கு வாக்குறுதிகளை அளித்துவிட்டு எதுவும் செய்யவில்லை. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியும், தமிழகத்தில் திமுக ஆட்சியும் நடைபெறும் நிலையிலும் காவிரி பிரச்னை நிலவுகிறது. இதனால் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். காவிரி பிரச்னையில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு மத்திய அரசு ஆதரவளித்து வரும் நிலையில், இரு மாநில முதல்வர்களும் உடன்படவில்லை. ஆனால் இங்கு மணல் மாபியா, கட்டப் பஞ்சாயத்து, போதைப் பொருள் கடத்தல் போன்றவை நடைபெற்று வருகிறது. இச்செயல்களில் ஈடுபடும் ஆளும் கட்சியினர் மீது திராவிட மாடல் ஆட்சியில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. நவகிரக தலங்கள் மேம்பாட்டுக்காக மத்திய அரசு ரூ. 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் கும்பகோணத்தை சர்வதேச ஆன்மீக மையமாக மேம்படுத்த பிரதமர் நடவடிக்கை எடுத்து வருகிறார். எனவே பாஜக கூட்டணி வேட்பாளர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார் சுதாகர் ரெட்டி. அப்போது, தஞ்சாவூர் தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு எம். முருகானந்தம், பாஜக மாவட்டத் தலைவர்கள் பி. ஜெய்சதீஷ் (தெற்கு), என். சதீஷ்குமார் (வடக்கு) உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.