திமுக அமைச்சரை புகழ்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர்
விருதுநகரில் நடைபெற்ற உழைப்பாளர் தின விழாவில் வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரனை அதிமுக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி புகழ்ந்து பேசினார்.
உழைப்பாளர் தினத்தை ஒட்டி விருதுநகரில் கை வண்டி மாட்டு வண்டி லாரி சுமை ஏற்றுமதி இறக்குமதி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க 52வது ஆண்டு விழா ரயில்வே பீட்டர்ஸ் சாலையில் பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக வருவாய்த் துறை அமைச்சர் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே டி ராஜேந்திர பாலாஜி,மாபா பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் கலந்து கொண்ட வருவாய்த்துறை அமைச்சர் கே கே சி ஆர் ராமச்சந்திரன் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டு கைகளை குலுக்கி மே தின வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்.
இதையடுத்து இக்கூட்டத்தில் முதலில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி இந்நிகழ்ச்சியில் திமுக அதிமுக கம்யூனிஸ்ட் கட்சிகள் என அனைத்தும் ஒன்றிணைந்து உழைப்பாளர் தினத்தில் அவர்களுக்காக பேச வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வருவாய்த்துறை அமைச்சர் இந்நிகழ்ச்சிக்கு வருவார் என்று எதிர்பார்க்கவில்லை. அமைச்சர் ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பார் என நினைத்தேன். அவருக்கு முன்பாகவே பேசிவிட்டு செல்லலாம் என நினைத்தேன். சர் என்று வந்து நின்றுவிட்டார். எங்காவது குளிர் பிரதேசத்திற்கு சென்று இருப்பார் என நினைத்திருந்தேன். ஆனால் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். அமைச்சர் கடுமையான உழைப்பாளி. அவரது உழைப்பு என்பது நமது மாவட்டத்திற்கு அவசியம். எங்களது உழைப்பு என்ன என்பது அவருக்கும் தெரியும். யார் ஆண்டாள் என்ன விருதுநகர் மாவட்டம் தலைசிறந்த மாவட்டம் என்று பெயர் எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன், உழைக்கும் வர்க்கம் கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பதால் தான் நாங்கள் சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சுகமாக இருக்கும் நாங்கள் உழைக்கும் தொழிலாளர்களை ஏறெடுத்து பார்க்க வேண்டும். உழைப்பாளிகளுக்காக அரசியல் கட்சிகள் எவ்வித வேறுபாடு இன்றி உழைத்துக் கொண்டிருக்கிறோம். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி என்றாலும் சரி தற்போதைய முதல்வர் மு க ஸ்டாலின் என்றாலும் சரி உழைப்பாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இந்நிகழ்ச்சிக்கு நான் சிறு வயது முதல் தற்போது வரை வந்து கொண்டிருக்கிறேன். அதிமுக திமுக கட்சிகள் வெவ்வேறாக இருந்தாலும் எல்லாருடைய எண்ணமும் விருதுநகர் மாவட்டம் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கி இருக்கிறது. அதில் நாங்கள் எல்லாம் ஒற்றுமையாக இருந்து விருதுநகர் மாவட்டம் முன்னேறுவதற்கு என்ன வழியோ உங்களுக்காக இணைந்து செயல்படுவோம் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியை ஆரம்பிப்பதற்கு முன்பாகவும் சரி நிகழ்ச்சி நிறைவு பெற்றவுடன் சரி இந்நாள் முன்னாள் அமைச்சர்கள் இருவரும் ஒரே மேடையில் இருப்பது சந்தித்து வாழ்த்து தெரிவித்துக் கொள்வது முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சிக்கு முன்பாக உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மேள தாளங்களுடன் உற்சாக நடனமாடி நகரின் பல்வேறு பகுதிகளில் பேரணியாக சென்று மே தினத்தை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.