அரும்புலியூர் ஏரிக்கரையில் தார் சாலை ஏற்படுத்த கோரிக்கை
அரும்புலியூர் ஏரிக்கரையில் தார் சாலை ஏற்படுத்தி காவணிப்பாக்கம் கிராமம் வரை போக்குவரத்திற்கு வழிவகை ஏற்படுத்த விவசாயிகள் மற்றும் கிராமத்தினர் கோரிக்கை.
Update: 2024-03-07 04:10 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் அரும்புலியூரில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டின் கீழ் 400 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. இந்த ஏரி நீர் பாசனத்தை கொண்டு அரும்புலியூர் காவணிப்பாக்கம், கரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 600 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இந்த ஏரிக்கரை முழுக்க சீமை கருவேல மரங்கள் வளர்ந்து புதராக இருந்தன. இதனால் மாட்டு வண்டி, டிராக்டர் மற்றும் நெல் அறுவடை இயந்திரம் போன்ற வாகனங்களை விவசாயம் சார்ந்த பணிகளுக்கு ஏரிக்கரை மீது இயக்க முடியாத நிலை இருந்து வந்தது. இதனால் ஏரிக்கரை மீதுள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இதனிடையே சில மாதங்களுக்கு முன் 1.90 கோடி ரூபாய் செலவில் அரும்புலியூர் ஏரிக்கரை பலப்படுத்தும் பணி நடந்தது. அப்போது ஏரிக்கரை மீதுள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. எனினும் மீண்டும் முள் மரங்கள் வளர்வதோடு மழைக்காலங்களில் ஏரிக்கரை சகதியாகும் நிலை உள்ளது. எனவே, அரும்புலியூர் ஏரிக்கரையில் தார் சாலை ஏற்படுத்தி காவணிப்பாக்கம் கிராமம் வரை போக்குவரத்திற்கு வழிவகை ஏற்படுத்த விவசாயிகள் மற்றும் கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.