பள்ளியில் தேங்கிய மழைநீரால் தொற்று நோய் அபாயம் - பெற்றோர் அச்சம்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள பூப்பாண்டியபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் கடலாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளதால் கொசு உற்பத்தியாகி நோய் தொற்று உருவாகும் நிலை உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மழை நீரை போக்கும் எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் ஊராட்சி நிர்வாகம் செயல்படுவதாகவும் குறை கூறுகின்றனர் இப்பகுதி பொதுமக்கள்.
இந்த நிலையில் மாணவர்களை பள்ளியில் விடுவதற்கு அழைத்து வந்த பெற்றோர் மழைநீர் தேங்கியுள்ளதை பார்த்து அச்சம் அடைந்தனர். மழைக்காலங்களில் நோய் தொற்று உருவாகி விஷக்காய்ச்சல் பரவும் சூழ்நிலை உள்ளதால் பள்ளி வளாகத்தில் பெருகியுள்ள மழை நீரால் கொசு உற்பத்தியாகி விஷக்காச்சல் பரவும் சூழ்நிலை உள்ளதாகவும், அந்தந்த பள்ளிகளின் சூழ்நிலைக்கு ஏற்ப தலைமை ஆசிரியரே விடுமுறை கொடுக்கலாம் என்று அறிவிப்பு வந்த நிலையில் சுகாதாரமற்று இருக்கும் இந்த இடத்தில் குழந்தைகளை அமர வைக்க வேண்டாம், அவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள் என்று குழந்தைகளின் பெற்றோர் தலைமை ஆசிரியரிடம் கோரிக்கை விடுத்தனர். இதனால் இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
கடந்த காலங்களிலும் இதே போல் மழைநீர் தேங்கியதால் ஏற்பட்ட பாதிப்பால் பள்ளி குழந்தைகள் பலரும் விஷக்காய்ச்சலுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்தனர் என்றும், அதே நிலை இப்போதும் தொடர்வதால் பள்ளி குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மழைக்காலம் தொடங்கியுள்ளதால் தொடர்ந்து பெய்யும் கனமழையால் பள்ளி மாணவர்கள் மீண்டும் மீண்டும் சிரமத்துக்கு ஆளாகும் நிலை உள்ளது. ஆகவே மாவட்ட சுகாதாரத் துறையினர் பூப்பாண்டியபுரம் கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.