பரமத்தி வேலூர் பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் திடீர் தீ விபத்து

பரமத்தி வேலூர் பகுதிகளில் நேற்று இரவு வெவ்வேறு இடங்களில் தீ விபத்து தீயனைப்பு துறையினர் போராடி தீயை அனைத்தனர்.

Update: 2024-03-15 10:26 GMT

பரமத்தி வேலூர் அருகேயுள்ள வெட்டுக்காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார் (45). அதே பகுதியில் இவருக்கு சொந்தமான  தேங்காய் மட்டையிலிருந்து தேங்காய் நார் மஞ்சு தயாரிக்கும் மில் பழைய பைபாஸ் சாலையில் நாமக்கல் செல்லும் சாலையில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் தேங்காய் மட்டையிலிருந்து மஞ்சு தயாரிக்கும் கன்வேயர் பெல்ட்டில் திடீரென உராய்வு ஏற்பட்டு தீ பற்றியதில்  அங்கு குவிந்து வைக்கப்பட்டிருந்த தேங்காய் நார் மஞ்சில்  தீப்பற்றி எரிந்துள்ளது.‌இதை பார்த்த அங்கு இருந்த தொழிலாளர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் கடும் வெயில் காரணமாக தீ மளமளவென பற்றி எரிய ஆரம்பித்தது.

இது குறித்து உடனடியாக நார்மில் உரிமையாளர் மோகன்குமார் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து அங்கு வந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினர் சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இருப்பினும் சுமார் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள  தேங்காய் நார் மஞ்சுகள் தீயில் எரிந்து கருகி நாசமானது.  அதே போல் பரமத்தி அருகே உள்ள பிள்ளைகளத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (50) விவசாயி. இவரது தோட்டத்தில் தற்போது தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விவசாயம் செய்யப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தோட்டத்தில் இருந்த செடிகொடிகள் மற்றும் மரங்கள் தீப்பற்றி எரிவதை பார்த்த விவசாயி ராஜா உடனடியாக வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.

இதே போல் பரமத்திவேலுார் பனங்காடு பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் கொட்டி‌ வைத்திருந்த குப்பை மற்றும் ‌பொத்தனூரில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த செடிகொடிகள் மற்றும் மரங்களுக்கு மர்ம நபர்கள் தீவைத்து விட்டு சென்றதால் நேற்று முன்தினம் இரவு தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.

Tags:    

Similar News